இந்திய சினிமாவின் 100–வது ஆண்டு விழா செப்டம்பர் 21–ந்தேதி முதல் 24–ந் தேதி வரை சென்னையில் நடக்கிறது. முதல் நாள் காலை மலையாள நடிகர்– நடிகை களின்கலை நிகழ்ச்சிகளும், மாலையில் தமிழ் நடிகர்– நடிகைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
22–ந் தேதி காலை கன்னட நடிகர்– நடிகைகளும், மாலையில் தெலுங்கு நடிகர்– நடிகைகளும் கலை நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர்.
23–ந்தேதி தென்னிந்திய மொழி கலைஞர்கள் கலந்து கொள்ளும் விருந்து நிகழ்ச்சி நடக்கிறது.
24–ந்தேதி நடக்கும் விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் தமிழக, ஆந்திர, கேரள, கர்நாடக முதல் மந்திரிகள் பங்கேற்கின்றனர். இதில் அனைத்து மொழிகளையும் சேர்ந்த திரைப்பட சாதனையாளர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள்.
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பட கலைஞர்கள் இதில் பங்கேற்க உள்ளதாக இந்திய சினிமா நூற்றாண்டு விழாக்குழு தலைவர் கல்யாண் தெரிவித்தார். சினிமா நூற்றாண்டு விழாவையொட்டி செப்டம்பர் 18–ந்தேதி முதல் 24–ந்தேதி வரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன.
இந்த ஒரு வாரமும் சென்னையில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் 1940, 50 மற்றும் 60களில் வெளியான பழைய படங்களை திரையிடும்படி கேட்டுக் கொள்ளப்படும் என்று திரைப்பட வர்த்தக சபை செயலாளர் எல்.சுரேஷ் தெரிவித்தார்.
எம்.ஜி.ஆர். நடித்த உலகம் சுற்றும் வாலிபன், குடியிருந்த கோவில், எங்க வீட்டு பிள்ளை, உரிமைக்குரல், நினைத்ததை முடிப்பவன், படகோட்டி உள்ளிட்ட படங்களும், சிவாஜி நடித்த வசந்தமாளிகை, தங்கபதக்கம், கவுரவம், திரிசூலம், கர்ணன் உள்ளிட்ட படங்களும் திரையிடப்பட உள்ளது.
ரஜினியின் அண்ணாமலை, படையப்பா, வேலைக்காரன், மனிதன், ஆறில் இருந்து அறுபது வரை, ராஜா சின்ன ரோஜா போன்ற படங்களும், கமலின் சகலகலா வல்லவன், அபூர்வ சகோதரர்கள், சிவப்பு ரோஜாக்கள், ரஜினியும் கமலும் இணைந்து நடித்த 16 வயதினிலே, நினைத்தாலே இனிக்கும், அபூர்வ ராகங்கள், இளமை ஊஞ்சலாடுகிறது படங்களும் திரையிட உள்ளன
Information From Maalaimalar.