நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து நேற்று மாலை பெங்களூருக்கு அரசு விரைவு பஸ் புறப்பட்டு வந்தது. பஸ்சில் 31 பயணிகள் இருந்தனர். பஸ்சை டிரைவர் சாமிநாதன் ஓட்டிச் சென்றார். அதில் மாற்று டிரைவர் அந்தோனி சேவியர் உடன் சென்றார். அந்த பஸ் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2 மணிளவில் சேலம்–நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ராசிபுரம் அருகேயுள்ள மல்லூர் மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் சாலையின் ஓரத்தில் இடது பக்கத்தில் மணல் லாரி ஒன்று பழுதாகி நின்று கொண்டிருந்தது.
அந்த மணல் லாரி மீது அரசு விரைவு பஸ் பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சில் இருந்த மாற்று டிரைவர் அந்தோனி சேவியர் 2 கால்களும் துண்டாகி பஸ்சுக்குள்ளேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 11 பயணிகள் காயம் அடைந்தனர். அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பெங்களூரைச் சேர்ந்த ராமர் என்ற பயணி உயிரிழந்தார்.
இந்த விபத்தில் அரசு விரைவு பஸ்சின் இடது பக்கம் முழுவதும் சேதம் அடைந்தது. நின்று கொண்டிருந்த மணல் லாரியின் பின் பகுதி பலத்த சேதம் அடைந்தது. பஸ் மோதிய வேகத்தில் நின்று கொண்டிருந்த மணல் லாரி கவிழ்ந்தது. லாரி மீது பஸ் மோதியதில் தரையில் உட்கார்ந்து லாரியில் ஜாக்கி ஏற்றிக் கொண்டிருந்த 2 பேர் காயம் அடைந்தனர். அவர் டிரைவர் மற்றும் கிளீனர் ஆக இருக்கலாம் என தெரிகிறது.
அவர்களைப் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை. இந்த விபத்தில் 11 பயணிகள் மற்றும் லாரி தொழிலாளர்கள் 2 பேர் உள்பட 13–க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
இந்த விபத்து பற்றி கேள்விப்பட்டதும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணம்மாள் நேரில் சென்று விசாரணை நடத்தினார். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தாமரைச்செல்வன் (ராசிபுரம்), மனோகரன் (வெண்ணந்தூர்) சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் மல்லூர் போலீசாரும், நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
மேலும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சேலம் கிளையைச் சேர்ந்த மேலாளர் சிவக்குமார், நெ.3 குமாரபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் பாலன் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு சென்றனர். பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் சாமிநாதன் தூக்க கலக்கத்தில் அதிக வேகத்தில் பஸ்சை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜேசிபி. எந்தரம் மூலம் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த விபத்து காரணமாக திருச்சி, கரூர், மதுரை, நாமக்கல் போன்ற பகுதிகளில் இருந்து சேலத்தை நோக்கி சென்ற பஸ்கள், லாரிகள் மல்லூர் வழியாக திருப்பி விடப்பட்டன.
Information From Maalaimalar