டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை சுற்றிப் பார்க்க விரும்புவர்களிடம் அடுத்த (செப்டம்பர்) மாதம் முதல் ரூ. 25 கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி ஜனாதிபதி மாளிகையில் எழில் மிகும் பூங்காவும் வரலாற்று சிறப்பு மிக்க பழமையான கட்டிடங்களும் உள்ளன.
இவற்றை சுற்றிப் பார்க்க உள்நாட்டு மக்களும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதற்காக ‘ஆன்லைன்’ மூலம் பதிவு செய்யும் வசதியை ஜனாதிபதி மாளிகை அதிகாரிகள் அறிமுகப்படுத்தினர்.
இதன்படி, கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த வசதியை பயன்படுத்தி 47 ஆயிரம் பார்வையாளர்கள் ஜனாதிபதி மாளிகையை கண்டு களித்துள்ளனர்.
தற்போது, ஜனாதிபதி மாளிகையின் எழிலை பேணி பராமரிக்க பார்வையாளர்களிடம் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அடுத்த (செப்டம்பர்) மாதத்திலிருந்து ரூ. 25 செலுத்தி தனிநபர்கள் ‘ஆன்லைன்’ மூலம் ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பதிவு செய்து கொள்ளலாம்.
12 வயதுக்குட்பட்ட சிறுவர் - சிறுமியருக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான கட்டணத்தை செலுத்தும் ‘இ-பேமெண்ட்’ வசதி நேற்று தொடங்கப்பட்டது.
இந்த புதிய கட்டண முறையால் இதுவரை இலவசமாக ஜனாதிபதி மாளிகையை பார்வையிட்டு வந்த 12 வயதுக்கு மேற்பட்ட மாணவ - மாணவியர் பாதிக்கப்படுவார்கள் என கல்வி நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Information From Maalaimalar