ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3-0 என தொடரை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. சொந்த மண்ணில் சோபிக்கத்தவறிய ஜிம்பாப்வே அணி, "ஹாட்ரிக்' தோல்வி அடைந்து ஏமாற்றியது.
ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா 2-0 என முன்னிலை வகித்தது. மூன்றாவது போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ஜிம்பாப்வே அணியில் ஜார்விஸ் நீக்கப்பட்டு மைக்கேல் சினவ்யா சேர்க்கப்பட்டார். "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் விராத் கோஹ்லி, "பீல்டிங்' தேர்வு செய்தார்.
சிபாண்டா ஏமாற்றம்:
ஜிம்பாப்வே அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. வினய் குமார் "வேகத்தில்' சிபாண்டா "டக்-அவுட்' ஆனார். முகமது ஷமி பந்தில் சிக்கந்தர் ராஜா (1) வெளியேறினார். பின் இணைந்த ஹாமில்டன் மசகட்சா, கேப்டன் பிரண்டன் டெய்லர் ஜோடி நிதானமாக ஆடியது. மூன்றாவது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்த போது, உனத்கத் பந்தில் டெய்லர் (23) அவுட்டானார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த மசகட்சா (38), அமித் மிஸ்ரா "சுழலில்' சிக்கினார்.
வில்லியம்ஸ் ஆறுதல்:
அடுத்து வந்த வாலர் (0), சிகும்புரா (3) சொற்ப ரன்னில் வெளியேறினர். கடந்த போட்டியில் அரைசதம் அடித்த உட்செயா (10) இம்முறை சோபிக்கவில்லை. பொறுப்பாக ஆடிய வில்லியம்ஸ், இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்தார். இவர், 45 ரன்கள் எடுத்த போது "ரன்-அவுட்' ஆனார். பிரையன் விடோரி (17), டென்டாய் சடாரா (23) ஓரளவு கைகொடுத்தனர். ஜிம்பாப்வே அணி 46 ஓவரில் 183 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆனது. இந்தியா சார்பில் அமித் மிஸ்ரா 4, முகமது ஷமி 2 விக்கெட் கைப்பற்றினர்.
விராத் அபாரம்:
சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா (14) ஏமாற்றினார். கடந்த போட்டியில் சதம் அடித்த ஷிகர் தவான் (35) இம்முறை பெரிய அளவில் சோபிக்கவில்லை. பின் இணைந்த கேப்டன் விராத் கோஹ்லி, அம்பதி ராயுடு ஜோடி மீண்டும் ஒரு முறை பொறுப்பாக ஆடியது. மூன்றாவது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்த போது, விடோரி பந்தில் அம்பதி ராயுடு (33) அவுட்டானார். மறுமுனையில் அபாரமாக ஆடிய கோஹ்லி, ஒருநாள் போட்டியில் தனது 24வது அரைசதம் அடித்தார். இவருக்கு சுரேஷ் ரெய்னா ஒத்துழைப்பு தந்தார். சடாரா பந்தில் சூப்பர் பவுண்டரி அடித்த ரெய்னா, அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.
இந்திய அணி 35.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 187 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுது. கோஹ்லி (68), ரெய்னா (28) அவுட்டாகாமல் இருந்தனர். "ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்த இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. நான்காவது போட்டி வரும் ஆக., 1ம் தேதி புலவாயோவில் நடக்கிறது.
Information From Dinamalar