கர்நாடகத்தில் அணைகள் நிரம்பியதால் ஓகேனக்கல்லில் உள்ள காவிரி ஆற்றில் நேற்று 1 லட்சத்து 35 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அருவிப்பகுதிகளை மூழ்கடித்தபடி வெள்ளம் சென்றது. இந்த வெள்ளத்தில் யாரும் குளிக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருந்தது.
ஆனால் இந்தத் தடையை மீறி தர்மபுரி மாவட்டம் செல்லன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த மாதப்பன் (வயது 50) உறவினர் இறந்ததற்காக நேற்று பகலில் இறுதிச்சடங்கு செய்தார். பிற்பகல் 2 மணிக்குப் பிறகு முதலைப் பண்ணை பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளித்தார். அப்போது அவரை வெள்ளம் அடித்துச்சென்றது.
இதைக்கண்ட உறவினர்கள் கூச்சல் போட்டனர். உடனே பரிசல் ஓட்டிகள் மாதப்பனை மீட்க 2 பரிசல்களில் சென்றனர். அப்போது ஒரு பரிசல் முன்னோக்கிச் செல்ல முடியாமல் முள் புதர்களில் சிக்கியது. இதனால் பரிசலில் இருந்தவர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்குப்பிறகு கரை திரும்பினர்.
மற்றொரு பரிசலில் சென்ற ஊட்டமலை பகுதியைச் சேர்ந்த மீன்பிடி தொழிலாளர்கள் ராமகிருஷ்ணன் (45), முத்து (40), சகாதேவன் (30) ஆகிய 3 பேரும் மாதப்பனை காப்பாற்ற முயன்றனர். மாதப்பன் ஆற்றில் இருந்த மரத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டார். பின்னர் மரத்தின் மேல் ஏறி அமர்ந்து கொண்டார்.
பரிசலில் சென்ற 3 பேரும் அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட போது பரிசல் நிலை குலைந்து வெள்ளத்தில் கவிழ்ந்தது. 3 பேரையும் வெள்ளம் இழுத்துச் சென்றது. அவர்கள் நீச்சல் தெரிந்தவர்கள் என்பதால் நீந்தி மரங்கள் இருந்த பகுதிக்கு வந்தனர். பின்னர் மரத்தைப் பிடித்து அதன்மேல் ஏறிக் கொண்டனர்.
வெள்ளம் கரை புரண்டு ஓடியதால் அவர்களால் கரைக்கு திரும்பமுடிய வில்லை. மாதப்பனை காப்பாற்றவும் முடியவில்லை. நான்கு பேரும் வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் தகவல் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டது.
கலெக்டர் விவேகானந்தன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ரா கார்க் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் மைக் உதவியுடன் 4 பேரையும் பத்திரமாக மீட்க இருக்கிறோம் பொறுமையாக இருங்கள் என்று நம்பிக்கை வார்த்தைகளை கூறியவாறு இருந்தனர். தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார், நீச்சல் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.
ஆனால் தண்ணீர் அதிகமாக வந்ததால் அந்த வேகத்துக்கு நீந்திச்சென்று 4 பேரையும் மீட்க முடியாது என்று அறிவித்தனர். மாலை 5 மணிக்கு மேல் இருள் சூழத் தொடங்கியதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. மழையும் பெய்தது.
பின்னர் அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவையும், கோவையில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர்களையும் அழைத்து வருவது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் உடனடியாகத் தொடங்கின.
நள்ளிரவு 1 மணி முதல் இன்று அதிகாலை 5 மணி வரை அவர்கள் நீச்சல் உடையில் இறங்கி 4 பேரையும் மீட்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால் முடியவில்லை. அதிகாலையில் கோவை மற்றும் பெங்களுரில் இருந்து இரண்டு ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டன. இரண்டு ஹெலிகாப்டர்களும் காவிரி வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் 4 பேர் இருக்கும் இடத்தை பார்க்க வட்டமிட்டன.
ஒரு ஹெலிகாப்டரில் இருந்து ரோப் கயிறு உதவியுடன் ஒரு வீரர் இறங்கினார். அவர் வெள்ள நீரில் இறங்கினார். பின்னர் ரோப் கயிரை பிடித்துக்கொண்டே ஒரு கையால் மரக்கிளையை வெட்டினார். அதன் பிறகு ஒருவரை மீட்டு ரோப் கயிறு மூலமாக ஹெலிகாப்டருக்கு அழைத்துச் சென்றார். அவரை ஹெலிகாப்டரில் ஏற்றி விட்டு மீண்டும் அவர் கீழே இறங்கினார். இதேபோல இன்னொரு வரையும் மீட்டு அழைத்துச் சென்றார்.
பின்னர் மற்றொரு ஹெலிகாப்டரில் இருந்து ஒரு வீரர் இறங்கினார். ஆனால் அவரை இரண்டு முறை வெள்ளம் அடித்துச் சென்றது. அவரும் சுதாரித்துக்கொண்டு வெள்ளத்தில் நீந்திச்சென்று மரக்கிளையில் ஏறினார். பின்னர் மரக்கிளையில் தவித்த மூன்றாவது நபரை மீட்டு ரோப் கயிறு மூலமாக மேலே சென்றார். அவரையும் ஹெலிகாப்டருக்குள் ஏற்றினார். பின்னர் இரண்டு ஹெலிகாப்டர்களும் மடம் பகுதியில் உள்ள அரசு பள்ளி மைதானத்தில் தரை இறங்கின.
உயிருடன் மீட்கப்பட்ட பரிசல் ஓட்டிகள் 3 பேரும் கீழே இறக்கப்பட்டு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 3 பேரும் அவசரமாக ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்ட்டு ஓகேனக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
மீண்டும் ஹெலிகாப்டர் ஆற்றுப்பகுதிக்கு சென்று வட்டமடித்தது. ஒரு வீரர் ஹெலிகாப்டரில் இருந்து ரோப்கயிறு உதவியுடன் ஆற்றில் இறங்கி இன்னொரு இடத்தில் உள்ள மரக் கிளையில் தொங்கிய மாதப்பனை மீட்க நீண்ட நேரம் போராடினார். கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கு மேல் அவரை மீட்க போராட வேண்டி இருந்தது.
மரக்கிளைகளை வெட்டி அவரை மீட்டு ரோப்கயிறு வழியாக ஹெலிகாப்டருக்கு அழைத்து வந்தார். பின்னர் அந்த ஹெலிகாப்டரும் மடம் பகுதியில் உள்ள அரசு பள்ளி மைதானத்தில தரை இறங்கியது. மாதப்பனுக்கும் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அவரும் ஓகேனக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் காட்சியை அமைச்சர் பழனியப்பன் நேரில் பார்வையிட்டார். நேற்று மாலை 3 மணி முதல் இன்று காலை 8 மணி வரை வெள்ளத்திலும், மழையிலுரும், நடுங்கும் குளிரிலும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தைரியமாக இருந்த 4 பேரையும் பத்திரமாக மீட்டு அவர்கள் உயிரை காத்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினரையும், மீட்புப்பணிக்கு அவசரமாக ஏற்பாடு செய்த மாவட்ட நிர்வாகத்தையும் பொது மக்கள் பாராட்டினார்கள்.
Information From Maalaimalar