மேட்டூர் அணை நிரம்பி விட்டதால் கர்நாடகாவி லிருந்து வரும் உபரி தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல ஆண்டாக அமைதியாக காணப்பட்ட காவிரி ஆற்றில் தற்போது ஆக்ரோஷமாக தண்ணீர் சீறி பாய்ந்து செல்வதை பார்க்கும் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் ஈரோடு மாவட்ட எல்லை பகுதியான நெரிஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை, பெரும்பள்ளம், சித்தார், காடப்பநல்லூர், பவானி வழியாக ஈரோட்டுக்கு சீறிப்பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது.
நேற்று மேட்டூர் அணைக்கு கர்நாடகாவிலிருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. ஆனால் இன்றோ ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்படுவதால் இன்று ஆற்றில் மேலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
ஈரோடு வரும் தண்ணீர் கொடுமுடி, கரூர் வழியாக திருச்சி பாய்ந்து செல்கிறது.
பாய்ந்து வரும் தண்ணீரால் பவானி காவேரி நகர், பசுவேஸ்வர் வீதி, கீரைக்கார வீதி, பாலக்கரை ஆகிய பகுதிகளில் 100 வீடுகளில் வெள்ளம் புகுந்தும் சூழ்ந்தும் உள்ளது.
இப்பகுதிகளில் உள்ள மக்கள் பவானி பகுதியில் இடிக்கப்பட்ட சாயப்பட்டறைகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அங்குள்ள சவுடேஸ்வரி அம்மன் திருமண மண்டபத்திலும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
ஈரோடு மாவட்ட கலெக்டர் சண்முகம், பவானி தாசில்தார் மற்றும் வருவாய்த் துறையினர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினர். தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு இலவச உணவு–உடைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அப்பகுதிகளில் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுள்ளது. அந்தந்த ஊராட்சி நகராட்சி சார்பில் 'தண்டோரா' மூலம் காவிரி கரையோர மக்கள் தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்குமாறும் தேவையானால் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்துக்கு செல்லும் படியும் அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.
அம்மாபேட்டை பகுதியில் உள்ள கதவணையிலிருந்தும் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை போன்ற பகுதிகளில் இருகரை களையும் தாண்டி தண்ணீர் பாய்ந்து செல்கிறது. ஆற்றில் யாரையும் குளிக்க விடாமல் கயிறு கட்டி உள்ளனர். பேரூராட்சி, ஊராட்சி சார்பில் ஆற்றில் யாரும் குளிக்க போக வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு வருகிறார்கள்.
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரையோரப் பகுதிகளிலும் சுமார் 10–க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இன்று மேலும் பல வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய வண்ணம் உள்ளனர்.
ஈரோடு அருகே உள்ள மொடக்குறிச்சி அருகே உள்ள குறுக்கபாளையம் பகுதியில் ஆற்றின் கரையோரம் நாட்டாற்றீசுவரர் கோவில் உள்ளது. ஆற்றில் தண்ணீர் அதிகம் போவதால் நாட்டாற்றீசுவரர் கோவிலுக்கு யாரும் போக வேண்டாம் என பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கோவிலுக்கு செல்லும் தரைப்பாலத்தை இன்று வெள்ளம் மூழ்கடித்து விட்டது. ஈரோடு தாசில்தார் சுசிலா மற்றும் வருவாய்த் துறையினர் அங்கு முகாமிட்டு வெள்ளத் தடுப்பு நடவடிககை பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
காவிரி ஆற்றில் இன்று மேலும் வெள்ளம் அதிகரித்து வருவதால் ஈரோடு அருகே உள்ள பள்ளிபாளையம் பகுதியில் இன்று அதிகாலை 80 வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதேபோல் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரையோர பகுதிகளில் உள்ள சுமார் 20 வீடுகளில் வெள்ளம் புகுந்தது. அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டனர்.
மேலும் இப்பகுதிகளை சேர்ந்த காவிரிக்கரையோர பகுதி மக்கள் வெள்ளம் காரணமாக வெளியேறு கிறார்கள்.
Information From Maalaimalar