குமரி மாவட்டத்தில் கனமழை: அணைகளுக்கு நீர்வரத்து பலமடங்கு அதிகரிப்பு


குமரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை ஜுன் 1-ந் தேதி பெய்யத் தொடங்கியது. 1 மாதமாக விடாமல் பெய்த மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மீண்டும் பரவலாக பெய்தது. நேற்று காலையில் இருந்தே மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தாலும் இரவில் வெளுத்து வாங்கியது. 

திருவட்டார், பூதப்பாண்டி, குளச்சல், இரணியல், பெருஞ் சாணி பகுதிகளில் விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக திருவட்டாரில் 112 மில்லி மீட்டர்(11.2 சென்டி மீட்டர்) மழை பதிவானது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- 

பேச்சிப்பாறை-49.2, பெருஞ்சாணி-60.4, சிற்றாறு1 -28.4, சிற்றாறு2-22.4, பொய்கை-18, மாம்பழத்துறை யாறு-56, இரணியல்-49, குளச்சல்-58.6, முள்ளங்கினா விளை-36, புத்தன்அணை-61, நாகர்கோவில்-29, பூதப் பாண்டி-24, சுருளோடு-58.6, கன்னிமார்-37.4, ஆரல்வாய் மொழி-18, பாலமோர்-46.3, மயிலாடி-24.6, கொட்டாரம் -25.8, முக்கடல்-60. 

கனமழையால் அணைகளுக்கு வரும் நீர்வரத்து நேற்றைய அளவைவிட பலமடங்கு அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர் மட்டும் 25 அடியில் இருந்து 1 அடிக்கும் மேல் அதிகரித்து இன்று 26.15  அடியாக இருந்தது. அணைக்கு நேற்று 174 கனஅடி மட்டும் வந்து கொண்டிருந்த நீர்உள்வரத்து இன்று 1279 கனஅடியாக உயர்ந்தது. 

அணையில் இருந்து 117 கனஅடி நீர்மட்டுமே வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 63.60 அடியில் இருந்து 64.40 அடியாக அதிகரித்தது. அணைக்கு நேற்று 301 கன அடி நீர் மட்டுமே வந்தது. இன்று 1070 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. 

269 கன அடி மட்டும் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு1-11.05, சிற்றாறு2 -11.5 மாம்பழத்துறையாறு- 25.92, முக்கடல்-11 அடியாகவும் இருந்தது. 2 மாதத்திற்கும் மேலாக மழை பெய்தும், இது நாள் வரை மைனஸ் அளவில் இருந்த பொய்கை அணை நீர்மட்டம் இன்று 1 அடியாக உயர்ந்தது. சிற்றாறு1 அணைக்கு 145 கனஅடி நீர் வருகிறது. 

75 கன அடி வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு2 அணைக்கு 103 கன அடியும், பொய்கை அணைக்கு 1 கனஅடியும், மாம்பழத்துறையாறு அணைக்கு 6 கனஅடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. மழையோர பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கீரிப்பாறை, காளி கேசம், மாறாமலை உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றுவெள்ளம் கரைபுரண்டோடுகிறது. 

மேலும், கனமழை காரணமாக மார்த்தாண்டம், குலசேகரம், பொன்மனை, அருமனை, திருவட்டார் உள்ளிட்ட பகுதிகளில் ரப்பர் பால் வெட்டும் பணிகள் முடங்கி உள்ளது. இதுபோல, ஆற்றூர், தேமானூர், ஞாறாம்விளை, தச்சன் விளாகம், தோவாளை, ஆரல் வாய்மொழி பகுதிகளில் செங்கல் சூளை தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

எனவே தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இன்று காலையும் நாகர் கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவ, மாணவிகள் குடைபிடித்தபடி சென்றனர்.

Information From Maalaimalar
Share this video :
 
Home | About Us | Our Services | Terms of Use | Privacy Policy | Disclaimer | Help | RSS Feeds| Feedback | Contact Us
Support : Copyright © Prabhanjam India Handicrafts Pvt. Ltd. - All Rights Reserved
Proudly powered by Blogger