ராஜமுந்திரி : ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், கரையோர பகுதிகளில் வசிக்கு 1,300 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தவுலேஸ்வரத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் துணை நதிகளான கவுதமி, வசிட்ட கோதாவரி மற்றும் இதர நதிகளிலும் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் கோதாவரியிலிருந்து 17 லட்சம் கன அடி நீர் கடலுக்கு செல்கிறது. இதனால் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 2வது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போலாவரம் பகுதியில் உள்ள பல கிராமங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோனசீமா பகுதியிலிருந்து 700 பேரும், தேவிபட்டனம் பகுதியிலிருந்து 600 பேரும் அப்புறப்படுத்தப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மக்களை முகாம்களுக்கு அனுப்பும் பணியில் தேசிய பேரிடர் மீட்டு குழுவினர் உதவி செய்து வருகின்றனர். வெள்ளம் காரணமாக தேவிபட்டணம் பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு பகுதிகளை மாவட்ட கலெக்டர் நீது குமார் பிரசாத் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு மீட்பு பணிகளை கவனித்து வருகின்றனர்.
Information From Thinakaran