லக்னோ: உத்திரபிரதேசத்தில் தொடரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 152ஆக உயர்ந்துள்ளது. கங்கை, யமுனா, கோமதி, சரகி உட்பட இம்மாநிலத்தில் கூடும் 10 நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. கான்பூர், சிதாபூர், லக்னோ, சுல்தான்பூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான விளை நிலங்கள் சேதமடைந்துள்ளன. கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 152 பேர் பலியாகி இருப்பதாகவும், 478 கால்நடைகள் மடிந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே டெல்லியில் மூன்றாவது நாளாக கனமழை கொட்டியது. பலமணி நேரம் நீடித்த கனமழையால் அலுவலகம் செல்வோர், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பெரும் அவதிக்கு உள்ளாகினர். சாணக்கியபுரி, லக்ஷ்மி நகர், ஆஷாபூர் உட்பட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனிடையே ஆந்திராவில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு கோதாவரி, வாரன்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மீட்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. ராணுவம், விமானப்படை, கடற்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படையினரும் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். 100 பாதுக்காப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரண பணிகளை துரிதப்படுத்துவது குறித்து உயரதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆந்திர முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி ஆலோசனை நடத்தியுள்ளார்.
Information From Thinakaran