தவறான சிகிச்சை காரணமாக பலி எண்ணிக்கை உயர்வு?
பாட்னா: பீகார் மாநிலத்தில் கடந்த வாரம் விஷம் கலந்த மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் 23 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தவறான சிகிச்சை காரணமாக பலி எண்ணிக்கை உயர்ந்திருக்கலாம் என புதிய தகவல் தற்போது கிடைத்துள்ளது. பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் கடந்த வாரம் மதிய உணவு சாப்பிட்ட 50 மாணவர்கள் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் சாப்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனை செல்லும் வழியிலேயே பல மாணவர்கள் இறந்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி பலர் இறந்தனர். மொத்தம் 23 பேர் இறந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மற்ற மாணவர்களுக்கு பாட்னா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரேத பரிசோதனையில் மதிய உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு பள்ளியின் முதல்வரே பொறுப்பு என விசாரணைக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அவர் தலைமறைவாகிவிட்டார். அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் உயிர் பலி அதிகரித்ததாக புதிய தகவல் கிடைத்துள்ளது. சாப்பாடு ஒத்துக் கொள்ளாமல் வாந்தி பேதியுடன் மருத்துவமனை வருபவர்களுக்கு அதை நிறுத்துவதற்கான மருந்து தான் கொடுக்கப்படும். விஷம் குடித்துவிட்டு மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு வயிற்றை காலி செய்யும் வகையில் வாந்தி எடுப்பதற்கான மருந்து கொடுக்கப்படும்.
சாப்ரா மருத்துவமனையில் வாந்தி பேதியுடன் வந்த குழந்தைகள் விஷம் கலந்து சாப்பாட்டை சாப்பிட்டவர்கள் என்பது தெரியாமல் வாந்தி பேதியை நிறுத்தும் மாத்திரை கொடுக்கப்பட்டது. இதனால் சாப்பாட்டில் கலந்த விஷம் அவர்களது உடலில் தங்கி சாவுக்கு காரணமாக அமைந்து விட்டதாக பாட்னாவை சேர்ந்த குழந்தை நல மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.
அரசு டாக்டர்கள் தயார் செய்த பிரேத பரிசோதனை அறிக்கையில் இந்த தவறு சுட்டிக் காட்டப்படவில்லை என்றாலும், முதன் முதலாக சிகிச்சை அளிக்கப்பட்ட மருத்துவமனை டாக்டர் கயாம் அன்சாரி இந்த தவறை ஒப்புக் கொண்டுள்ளார். முதலில் கொண்டுவரப்பட்ட 5 மாணவர்களுக்கு வாந்திபேதியை நிறுத்தும் மாத்திரை கொடுக்கப்பட்டது உண்மைதான். பின்னர் வரிசையாக மாணவர்கள் வரத்தொடங்கியதும், சிகிச்சை முறையை மாற்றிக் கொண்டோம் என அன்சாரி தெரிவித்தார்.
Information From Thinakaran