இணையம் விரும்பா மனிதர்கள் இருக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு இணையதளங்கள் நம் வாழ்வில் ஒன்றிணைந்து விட்டன. பொழுது போகாமல் கணினி முன் அமர்பவர்களுக்கு அறிவு, விளையாட்டு, பொழுதுபோக்கு என விதவிதமான தகவல்களை அள்ளித் தரும் இணையதளங்கள் இருக்கின்றன. அந்த வரிசையில் ஒரு சில விசித்திர இணையதளங்களும் இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு விசித்திரமான இணையதளத்தைப் பற்றிய செய்தி தான் இது.

www.seeyourfolks.com இது தான் அந்த வினோதமான இணையதளத்தின் முகவரி. நம் பெற்றோரை அவர்களின் மறைவுக்கு முன் எத்தனை முறை பார்ப்போம் என்று கணக்கிடமுடியும் என்கிறது இந்த இணையதளம். நம்ப முடிகிறதா?!
இது ஜோசியம் என்று நினைத்து விடாதீர்கள் ஏன் என்றால் இந்த இணையதளமானது, 2011-ல் உலக சுகாதார அமைப்பு (World Health Organization) வெளியிட்ட வாழ்நாள் எதிர்பார்ப்பு தகவல்களை (life expectancy data) அடிப்படையாக கொண்டே செயல்படுகிறது. அதிகாரப்பூர்வ தகவல்களை பயன்படுத்தி கணித்துக் கூறுவதால் இதன் நம்பகத்தன்மை அதிகம் என்றும் கூறப்படுகிறது.
இந்த இணையதளத்திற்கு சென்றால் சில அடிப்படை கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. அவை உங்கள் தாய், தந்தையின் வயது மற்றும் அவர்கள் வசிப்பிடம் பற்றிய கேள்வி. மேலும் ஒரு ஆண்டில் உங்கள் பெற்றோரை நீங்கள் எத்தனை முறை சந்திக்கிறீ்ர்கள் என்ற கேள்வியும் இடம் பெற்றிருக்கும். இந்த தகவல்களை கொடுத்தால் விநாடிகளில் இன்னும் எவ்வளவு நாட்கள் நீங்கள் உங்கள் பெற்றோரை காண முடியும் என்ற தகவல் திரையில் தெரிகிறது.
வாழ்க்கை ஒரு ஓட்டப்பந்தயம் மாதிரி அனைவருமே ஓடிக் கொண்டிருக்கிறோம். நம் நெருங்கிய உறவுகளிடம் கூட அதிக நேரம் செலவழிப்பதில்லை. நம்மை இந்த உலகிற்கு கொண்டு வந்த நம் தாய், தந்தையருடன் நாம் எவ்வளவு நேரம் செலவிட முடியும் என்பதை ஒரு எச்சரிக்கை போல் இந்த இணையம் தெரிவிப்பதால், நீண்ட காலமாக பெற்றோரை பார்க்க தவறியவர்கள் கூட தங்கள் பெற்றோரை தேடி ஓடுவார்கள் என கூறும் இந்த இணையதளம் “மரணம் குறித்த விழிப்புணர்ச்சியை அதிகரிப்பது மிக முக்கியம். அது, நாம் நமது எஞ்சியுள்ள வாழ்நாளை மிக அர்த்தமுள்ளதாக்க உதவும்” என்ற கருத்தை முன்வைக்கிறது.
Information From Puthiyathalaimurai