விஜய், அமலாபால் ஜோடியாக நடித்துள்ள தலைவா படம் நாளை (9–ந்தேதி) வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இப்படத்தை மதராச பட்டணம் விஜய் இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மும்பை மற்றும் உலகம் முழுவதிலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்படும் என்று சந்திர பிரகாஷ் ஜெயின் கூறினார்.
நேற்று காலை தியேட்டர்களில் முன்பதிவு துவங்க இருந்தது. இந்த நிலையில் திடீரென்று தலைவா படத்தை திரையிடும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் மாணவர் புரட்சிப்படை என்ற பெயரில் தியேட்டர்களுக்கு வந்த மர்ம கடிதத்தில் தலைவா படத்தை திரையிட்டால் உங்கள் தியேட்டரில் குண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. போன் மூலமும் மிரட்டல்கள் வந்தன.
இதையடுத்து டிக்கெட் முன்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் தலைவா படம் திட்டமிட்டபடி நாளை ரிலீசாகுமா என்பதில் கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது. தலைவா அரசியல் படம் அல்ல என்றும் வதந்திகள் பரப்பப்படுவதை நம்ப வேண்டாம் என்றும் விஜய் அறிவித்தார். இப்பிரச்சினை குறித்து விவாதிக்க தியேட்டர் அதிபர்கள் சங்கம் கூட்டம் நேற்று மாலை பிலிம்சேம்பரில் நடந்தது. சங்க தரைவர் அபிராமி ராமநாதன் தலைமை தாங்கினார். இதில் தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள் பங்கேற்றனர்.
நள்ளிரவுவரை கூட்டம் காரசாராக நடந்தது. தலைவா படத்துக்கு மறு தணிக்கை குழு யூ சான்றிதழ் அளித்துள்ளது. வரி விலக்கு குழுவினருக்கு படத்தை திரையிட்டு காட்டி வரி விலக்கு பெற்று தர வேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள் தரப்பில் வற்புறுத்தப்பட்டது. தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. தயாரிப்பாளர் தரப்பில் வரி விலக்கு குழுவுக்கு படத்தை திரையிட்டு காட்ட ஏற்பாடு செய்வதாக உறுதி அளிக்கப்பட்டது.
வரி விலக்கு குழுவினர் இன்று படம் பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரி விலக்கு அளிக்கலாம் என அவர்கள் சான்றிதழ் அளித்தால் படம் நாளை ரிலீசாகும் என கூறப்படுகிறது
Information From Maalaimalar