மகள் பிடிவாதத்தால் டைரக்டர் சேரன் உடைந்து போய் இருக்கிறார். ஐகோர்ட்டில் நேற்று ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வந்த போது சேரன் மனைவி செல்வராணியுடன் வந்து இருந்தார். மகள் தாமினியும் வந்து இருந்தார்.
தாமினி முகத்தை பார்க்கவும் பேசவும் சேரனிடம் ஆர்வம் பொங்கியது. ஆனால் தாமினி கண்டு கொள்ளவே இல்லை. முகத்தில் வருத்தம், சலனம் எதுவும் இன்றி இருந்தார். காதலன் சந்துருவை கைவிடுவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார்.
இரு வாரங்கள் தாமினி படித்த பள்ளிக் கூடத்தின் தாளாளர் வீட்டில் அவரை தங்க
வைக்க கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. டைரக்டர் சேரனிடம் பேசிய போது ஒரு தந்தையின் வலிகளை உணர முடிந்தது. அவர் கூறியதாவது:–
என்னை நிறைய பேர் போனில் அழைக்கிறார்கள். யாரிடமும் பேச முடிய வில்லை. பேசும் போது வேதனையை கட்டுப்படுத்த முடியவில்லை. இது எனக்கு ஏற்பட்டுள்ள தனிப்பட்ட வேதனை. இந்த பிரச்சினையை உடனடியாக தீர்ப்பதற்கு நான் ஹீரோ இல்லை என்று எனக்கு தெரியும். சினிமா வேறு நிஜ வாழ்க்கை வேறு. மகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்க போராடும் ஒரு தந்தையாக என்னை எல்லோரும் பார்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
எந்த விதத்திலும் எனது சொந்த பலத்தை நான் பயன்படுத்தவில்லை. இந்த பிரச்சினையை சட்டத்தின் உதவியோடு நேர்மையாக தீர்த்துக் கொள்ள விரும்புகிறேன். எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
பத்திரிகையாளர்களை சந்தித்த போது நான் அழுது விட்டேன். மகள் மீதுள்ள பாசத்தால் அழுகிறேன்.
திரையுலகில் எல்லோரும் எனக்கு உதவியாக இருக்கிறார்கள். டைரக்டர்கள் என்னுடன் இருக்கிறார்கள். என் இதயம் காயப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் திரையுலகினர் எனக்கு துணையாக இருப்பது வலிக்கு மருந்தாக உள்ளது.
என் மகள் மேல் எந்த தப்பும் இல்லை. அவளுக்கு இருபது வயதுதான் ஆகிறது. வாழ்க்கை பற்றி புரியாத வயது. இது கோபப்படுவதற்கான நேரம் அல்ல. அவளுக்கு நல்லது நடக்க போராடுகிறேன்.
இவ்வாறு சேரன் கூறினார்.
Information From Maalaimalar