பெண்களுக்கான ஜுனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முதல் கால் இறுதிப்போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியை எதிர்கொண்டது.
ஸ்பெயின் அணி வீராங்கனை சாண்டல் ஜெனி 7-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோலாக்கினார். அதற்கு பதிலாக அடுத்த 3-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை மோனிகா பதில் கோல் போட்டார். தேனீர் இடைவேளைக்கு சற்று முன் 30-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி கேப்டன் பொனஸ்ட்ரா கோல் போட்டார். அதற்கு பதிலடியாக இந்திய வீராங்கனை நவ்நீத் கவுர் 34-வது நிடத்தில் கோல் போட்டார். இதனால் முதல் பாதி நேரத்தில் இரண்டு அணிகளும் 2-2 என சமநிலையில் இருந்தது.
இடைவேளைக்குப்பிறகு இந்திய வீராங்கனைகளின் ஆட்டத்தில் சூடுபிடித்தது. இதனால் 41-வது நிமிடத்தில் கடாரியாவும், 48-வது நிமிடத்தில் ராணியும் கோல் போட்டனர். இதனால் இந்தியா 4-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதற்கு பதில் கோல் போட ஸ்பெயின் வீராங்கனை முயன்றனர். ஆனால் பலனளிக்கவில்லை. இதனால் இந்தியா ஸ்பெயினை வீழ்த்தி முதல் முறையாக உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் அரை இறுதிக்கு தகுதிப் பெற்றது.
இந்திய அணி அரை இறுதி போட்டியில் நெதர்லாந்து அல்லது தென்ஆப்பிரிக்காவுடன் மோத உள்ளது.
Information From Maalaimalar