கணிதத்தில் சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 1959ம் வருடம் ருமேனியாவில் தொடங்கப்பட்டது. இது உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் உலக அளவிலான போட்டிகளாகும். முதலில் 7 நாடுகளில் இருந்து மாணவர்கள் கலந்தகொண்ட இப்போட்டி, நாளடைவில் விரிவடைந்து தற்போது 100 நாடுகள் வரை இதில் கலந்துகொள்கின்றன.
ஆண்டுதோறும் ஒவ்வொரு நாட்டில் நடத்தப்படும் இப்போட்டியின் விதிமுறைகளும், மரபுகளும் மாறாமல் கணித ஒலிம்பிக் போட்டியின் ஆலோசனை வாரியம் வழி நடத்துகின்றது.
இந்த ஆண்டிற்கான 54வது கணித ஒலிம்பிக் போட்டி, கொலம்பியா நாட்டில் சாண்டா மார்தா என்ற இடத்தில் நடைபெற்றது. 97 நாடுகளில் இருந்து மொத்தம் 528 மாணவர்கள் இந்தப்போட்டியில் கலந்துகொண்டனர்.
இதில், இந்தியாவில் இருந்து 6 மாணவர்கள் பங்கேற்றனர். மும்பையில் உள்ள டாட்டா ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும் ஹோமி பாபா அறிவியல் கல்வி நிறுவனம் இந்த மாணவர்கள் குழுவின் செலவுகளை ஏற்றது. இந்திய மாணவர்கள் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும், மூன்று வெண்ககலப் பதக்கங்களையும் இந்தப் போட்டியில் பெற்றுள்ளதாக நேற்று வெளிவந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவைச் சேர்ந்த சங்கிக் சஹா, புதுடெல்லியைச் சேர்ந்த சுபம் சின்ஹா ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களையும், பிலாயைச் சேர்ந்த பல்லவ் கோயல், ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரணாப் நுதி மற்றும் புனாவைச் சேர்ந்த அனீஷ் பிரசாத் செவேகரி ஆகியோர் வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுள்ளனர். இவர்களுடன் சென்ற மற்றொரு மாணவர் பூனாவைச் சேர்ந்த சைத்தன்யா தபு என்பவர் ஆவார்.
Information From Maalaimalar