பிரான்ஸ் தலைநகரம் பாரீசில் ஈபிள் கோபுரம் (டவர்) உள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றான இது 1889–ம் ஆண்டு ஈபிள் என்ற என்ஜினீயரால் வடிவமைத்து கட்டப்பட்டது. 1062 அடி (324 மீட்டர்) உயரம் கொண்டது. கோடைகாலமான தற்போது அதை தினசரி 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்றனர். ஆண்டுக்கு 70 லட்சம் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், நேற்று இந்த கோபுரத்தை தகர்க்க அதற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக அல்கொய்தா தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்து இருந்தனர். தீவிரவாதிகளின் பேச்சை இடை மறித்து கேட்ட போது இந்த தகவல் கிடைத்ததாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்தது.
இதனால் பீதி அடைந்த ஈபிள் கோபுர நிர்வாகிகள் அதை மதியம் 12.30 மணி முதல் மாலை 2.30 மணி வரை மூடினர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இச்சம்பவத்தால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.
பின்னர் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. எனவே, மாலை 2.30 மணிக்கு பிறகு பார்வையாளர்களுக்காக மீண்டும் ஈபிள் கோபுரம் திறக்கப்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போன்று விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து ஈபிள் கோபுரம் மூடப்பட்டது. தற்போது நேற்று 2–வது தடவையாக மூடப்பட்டுள்ளது.
இதுபோன்ற வதந்தியால் இந்த வருடத்தில் மட்டும் 2 தடவை ஈபிள் கோபுரம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Information From Maalaimalar