மும்பை கொலாபா பகுதியில் 2 மாதங்களுக்கு முன்பு ஆக்ஸிஸ் வங்கி ஏ.டி.எம். மையங்களில் போலி கார்டுகளை பயன்படுத்தி போலீஸ்காரர்களின் சம்பள பணம் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டது.
இதையடுத்து வங்கி அதிகாரிகள் உஷார் ஆனார்கள். சம்பந்தப்பட்டவர்களின் ஏ.டி.எம். கார்டுகளை முடக்கி நடவடிக்கை எடுத்தனர். தற்போது மீண்டும் ஆக்ஸிஸ் வங்கி ஏ.டி.எம். மையங்களில் நூதன கொள்ளை நடந்துள்ளது. இந்த முறை போரிவல்லி பகுதியில் உள்ள ஆக்ஸிஸ் வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
முன்பு போலீஸ்காரர்களின் பணம் கொள்ளை போனது. இப்போது பொது மக்களின் பணம் கொள்ளை போய் இருக்கிறது. மொத்த்ம 13 வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டது. இது பற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது.
பிரபாபாட்டியா என்ற பெண்ணின் கணக்கில் இருந்து இந்த மாதம் 5–ந்தேதி 3 முறை ஏ.டி.எம். மையத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் திருடப்பட்டுள்ளது. இவர் தனது மகனின் கல்லூரி கட்டணத்துக்காக இந்தப் பணத்தை சேமித்து வைத்து இருந்தார்.
இது பற்றி மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட வங்கிக்கு தகவல் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் மேலும் பல வாடிக்கையாளர்கள் இது போல் தங்களது வங்கி கணக்கில் இருந்த பணம் ஏ.டி.எம். மையங்களில் இருந்து திருடப்பட்டு உள்ளதாக புகார்கள் வந்தன. மொத்தம் 13 பேர் புகார் செய்துள்ளனர்.
ஏ.டி.எம். எந்திரங்களின் தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் அதில் ஸ்கிம்மர் கருவியை ரகசியமாக பொருத்தி ஏ.டி.எம். கார்டுகளை நகல் எடுத்து விடுகிறார்கள். பின்னர் அது போல் போலி கார்டுகளை தயாரித்து இந்த நூதன கொள்ளையில் ஈடுபடுவதாக போலீசார் தெரிவித்தனர்.
ஒரே கும்பல் இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. திருட்டு நடந்த ஏ.டி.எம். மையங்களில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் சந்தேகப்படும் நபரின் உருவம் பதிவாகி இருக்கும். எனவே கண்காணிப்பு காமிரா மூலம் கொள்ளையனை பிடிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக திருட்டு நடந்த ஏ.டி.எம். மையங்களின் கண்காணிப்பு காமிரா பதிவுகளை சம்பந்தப்பட்ட வங்கிகளிடம் இருந்து போலீசார் கேட்டு இருக்கிறார்கள்.
Information From Maalaimalar