பாட்னாவில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த மாதம் மதிய உணவு சாப்பிட்ட 23 மாணவ - மாணவிகள் பரிதாபமாக பலியாகினர். ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 20க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் 3 வார சிகிச்சைக்கு பின்னர் நேற்றுதான் வீடு திரும்பினர்.
இந்நிலையில், நலந்தா மாவட்டத்தில் உள்ள தராரி கிராமத்தில் உள்ள துவக்கப்பள்ளியில் இன்று மதிய உணவு சாப்பிட்ட 15 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து, அருகாமையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சாப்பிட்ட மதிய உணவில் விஷத் தன்மை கலந்திருந்ததே இந்த 'திடீர்' வயிற்று வலிக்கு காரணம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த பள்ளிக்கு விரைந்த கல்வி அதிகாரிகள், இச்சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர். உணவின் மாதிரியை சேகரித்த மாவட்ட சுகாதார அதிகாரிகள் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பீகார் பள்ளிகள் அடுத்தடுத்து மதிய உணவு சாப்பிடும் மாணவர்கள் பாதிப்புக்குள்ளாவது பெற்றோரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
Information From Maalaimalar