வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மட்டுமின்றி, அதன் ரொக்க கையிருப்பு விகிதம் உள்ளிட்ட எதிலும் மாற்றம் எதுவும் இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மும்பையில் இன்று நடைபெற்ற 2013-14 நிதியாண்டுக்கான முதல் காலாண்டு கடன் கொள்கை மறு ஆய்வுக்குப்பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ரெப்போ வீதம், அதாவது, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி தொடர்ந்து 7 புள்ளி இரண்டு ஐந்து சதவீதமாக நீடிக்கும்.
இதேபோல, ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் செய்துள்ள குறுகிய கால டெப்பாசிட்டுக்கு வழங்கப்படும் வட்டியான ரிவர்ஸ் ரெப்போவிலும் மாற்றம் செய்யப்படவில்லை. அதனால், அது 6 புள்ளி இரண்டு ஐந்து சதவீதமாக தொடரும். இதுபோக, CRR எனப்படும் ரொக்க கையிருப்பு விகிதமும், ஏற்கனவே உள்ள 4 சதவீதம் என்ற அளவில் இருந்து, இப்போதைக்கு மாற்றப்படாது எனவும் கூறப்பட்டுள்ளது.
பணவீக்கம் தொடர்ந்து அதிகளவில் நீடிப்பதும், ரூபாய் மதிப்பு சரிவு அதிகரித்திருப்பதுவும் ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைககளுக்கு காரணங்களாக கூறப்படுகிறது. மேலும், நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 புள்ளி 5 சதவீதமாக இருக்கும் என்றும் ரிசரவ் வங்கி கணித்துள்ளது.
முந்தைய கணிப்பான 5.7 சதவீதத்தை விட இது 0 புள்ளி 2 சதவீதம் குறைவு. இதனால், இன்று இந்திய பங்குசந்தையிலும் பெரிய அளவு தாக்கம் இன்றி, மந்த கதியில் வணிகம் தொடர்கிறது.
Information From Puthiyathalaimurai