மேட்டூர்: கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட முக்கிய அணைகள் நிரம்பி உள்ளன. இரு அணைகளில் இருந்தும் 2 நாட்கள் ஒரு லட்சம் கன அடி அளவுக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில், கடந்த 27ம் தேதி முதல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்ததால் இரு அணைகளில் இருந்தும் நீர் திறப்பு வினாடிக்கு 65 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்துள்ளது. நேற்று முன்தினம் காலை வினாடிக்கு 88,984 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 61,233 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் ஆடிப்பெருக்கு அன்று மக்கள் நீராடுவதற்கு வசதியாக நேற்று முன்தினம் மாலை முதல் வினாடிக்கு 10,800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
நீர்வரத்தை விட திறப்பு குறைவாக இருப்பதாலும், டெல்டா பாசனத்துக்கு இன்னும் தண்ணீர் திறக்கப்படாததாலும், அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 101 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 104.22 அடியாக அதிகரித்தது. நீர்மட்டம் ஒரே நாளில் 3.22 அடி உயர்ந்துள்ளது. அணை யின் நீர் இருப்பு 70.41 டிஎம்சி. தண்டோரா: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 104 அடியை தாண்டியதாலும், அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகமாக இருப்பதாலும், 16 கண் மதகு வழியாக உபரிநீர் வெளியேறும் பகுதியில் உள்ள தங்கமாபுரிபட்டணம், தொட்டில் பட்டி, சேலம் கேம்ப், பூலாம்பட்டி காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நேற்று முன்தினம் வருவாய் துறையினர் தண்டோரா மூலம் எச்சரித்தனர்.
தமிழக&கர்நாடக எல்லையில் பிலிகுண்டுலு பகுதியில் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 76,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 75,000 கனஅடியாக சரிந்தது. கடந்த 27ம் தேதி வினாடிக்கு 81,400 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இது நடப்பு ஆண்டில் அதிகபட்ச அளவாகும்.நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக நேற்று 10வது நாளாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், அருவிகளில் குளிக்கவும் தடை நீடித்தது. இதனால், சுற்றுலா பயணிகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளதால் ஒகேனக்கல் வெறிச்சோடியது.
Information From Dinakaran