நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் 13 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட் டில் தலா ஆயிரம் மெகா வாட் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன.முதல் அணு உலை 13ம் தேதி நள்ளிரவு முதல் இயங்கத் தொடங்கியது. இதிலிருந்து அடுத்த மாதம் 2வது வாரத்தில் 400 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் 2வது அணு உலை பணிகளும் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இதில் டம்மி எரிபொ ருள் நிரப்பும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. தற்போது எரிபொருள் பொருத்தும் பணி முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. மொத்தம் 163 எரிபொருள் பொருத்தப்பட்டுள்ளதாக கூடங்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் தெரிவித்தார்.
இந்த முடிவுகள் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட உள்ளன. இதைத் தொடர் ந்து 2வது அணு உலையில் வெப்பநீர் சோதனை ஓட்டம் நடத்த அணுசக்தி ஒழுங்கு முறை வாரியம் அனுமதி அளிக்கும்.வெப்ப நீர் சோதனை ஓட்டத்தின் போது அணு உலை இயங்கினால் ஏற்படும் அழுத்தத்தை விட ஒன்றரை மடங்கு அதிகமான அழுத்தத்தை செலுத்தி அணு உலையின் அழுத்த கலன் பரிசோதிக்கப்படும். ரஷ்ய விஞ்ஞானிகள், இந்திய அணுசக்தி கழக விஞ்ஞானிகள் முன்னிலையில் இந்த சோதனைகள் நடைபெறும்.தற்போதைய நிலவரப்படி, 2வது அணு உலையில் 94.77 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. 2வது அணு உலையின் மூலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மின் உற்பத்தியை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
Information From Dinakaran