சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு முனையம் மற்றும் உள்நாட்டு முனையங்கள் சர்வதேச அளவில் அதி நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டன.
இதை கடந்த ஜனவரி மாதம் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி திறந்து வைத்தார். இதையடுத்து உள்நாட்டு முனையம் முழுமையாக செயல்பட்டு வருகிறது. ஆனால் பன்னாட்டு விமான நிலையம் செயல்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
குடியுரிமைத் துறை, சுங்கத்துறை ஊழியர்கள் பற்றாக்குறையாலும், பணிகளுக்கு தேவையான இடங்களை ஒதுக்கீடு செய்யாததாலும் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வரவில்லை.
இதையடுத்து இந்த புதிய பன்னாட்டு முனையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர இந்திய விமான நிலைய ஆணையகம் முழு முயற்சி எடுத்தது. அதில் உள்ள குறைகள் களையப்பட்டன.
இதைத் தொடர்ந்து இந்த விமான நிலையம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இன்று மதியம் 12 மணிக்கு சிங்கப்பூர் செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டு சென்றது. அதில் பயணம் செய்த பயணிகள் காலை 9 மணிக்கே விமான நிலையத்துக்கு வந்து விட்டனர். அவர்களிடம் குடியுரிமை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்த பின்னர் விமானத்தில் பயணம் செய்தனர்.
முழுவதும் குளு குளு வசதியுடன் கண்ணாடி மாளிகைபோல இந்த விமான நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொண்டனர்.
இன்று மாலை 5 மணிக்கு மொரீசியஸ் செல்லும் ஏர் ஆசியா விமானமும், இரவு 10 மணிக்கு சிங்கப்பூர் செல்லும் இன்டிகோ விமானமும், நள்ளிரவு 1 மணிக்கு கொழும்பு செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானமும் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும்.
Information From Maalaimalar

