சீனாவின் பல பகுதிகளில் கோடை காலத்தின் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. ஷங்காய் நகரில் 140 ஆண்டு கால வானிலை வரலாறு சந்தித்திராத வெப்ப நிலை நீடிக்கிறது.
வெப்பத்தை தவிர்க்கும் வகையில் அதிக அளவில் வெளியே நடமாட வேண்டாம் எனவும், உடலை குளுமையாக வைத்திருக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெட்ட வெளியில் தோசைக் கல்லை வைத்து நேரடி சூரிய வெப்பத்தின் மூலம் மக்கள் ஆம்லட் தயாரிக்க முயல்வதை சில ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன. வெயிலின் வெப்பம் அந்த அளவிற்கு உச்சகட்டத்தில் உள்ளது.
சீனாவின் தொழில் வளம் மிகுந்த ஷங்காய் மாகாணத்தில் கடந்த புதன்கிழமை மட்டும் வெயிலின் வெப்பத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் 10 பேர் மாரடைப்பால் பலியாகியுள்ளனர்.
மத்திய சீனா மற்றும் சீனாவின் கிழக்கு பகுதிகளில் வெயிலின் வெப்பம் மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஷங்காய் மற்றும் பல பகுதிகளில் உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள் போன்றவை வறண்டு விட்டதால் நாள்தோறும் சுமார் ஒரு டன் மீன்கள் துடிதுடித்து பலியாகின்றன.
ஹூனாள் மாவட்டத்திலும் கடும் வறட்சி நிலவுவதால் 5 லட்சம் மக்கள் குடிநீர் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.
இதனையடுத்து, நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழும் மக்களுக்கு ரேஷன் முறையில் தண்ணீர் வழங்க உள்ளூர் நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளதாக அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
Information From Maalaimalar