விழுப்புரம் மாவட்டம் மயிலத்தை அடுத்த டி.பரங்கினி பகுதியை சேர்ந்தவர் கர்ணன். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு ராகுல் என்ற 2 மாத குழந்தை உள்ளது.
ஒரு மாதத்துக்கு முன்பு ராகுல் வீட்டில் இருந்தபோது அவனது உடலில் திடீரென தீப்பிடித்தது. வீடும் தீப்பற்றி கொண்டது. அவனை காப்பாற்றி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அதன்பிறகு பக்கத்து வீட்டில் மர்மமாக தீப்பிடித்தது. இதனால் பயந்துபோன ராகுலின் பெற்றோர் அவனை புதுவை அருகே உள்ள சிங்கிரி கோவிலுக்கு கொண்டு வந்தனர். அங்கு ஒரு வீட்டில் தங்கி இருந்தபோதும் அவனது உடலில் தீப்பிடித்தது.
அதன்பிறகு வானூர் அருகே உள்ள உறவினர் கிராமத்துக்கு சென்று தங்கினார்கள். அங்கு குழந்தையின் உடலில் தீப்பிடித்தது. பக்கத்து வீடு ஒன்றும் தானாக தீப்பிடித்து எரிந்தது. அவனை எந்த ஊருக்கு கொண்டு சென்றாலும் தானாக அவனது உடலில் தீப்படிப்பதுடன் அந்த ஊரில் உள்ள வீடுகளும் எரிவதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதனால் ராகுலை ஊருக்குள் விட மறுத்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பக்கத்து கிராமமான குமுளம்பட்டில் உள்ள மாரியம்மன் கோவிலில் ராகுலுடன் கர்ணன், ராஜேஸ்வரி தஞ்சமடைந்தனர்.
நேற்று இரவு பிரம்மதேசத்தில் உள்ள வக்கிர காளியம்மன் கோவிலுக்கு வந்தனர். இரவு முழுவதும் அந்த கோவிலிலேயே தங்கினர். இதனை அறிந்த பக்கத்து கிராம மக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து பார்த்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்தவுடன் திண்டிவனம் தாசில்தார் ஜெயக்குமார், துணை தாசில்தார் மதியழகன், பிரம்மதேசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். கர்ணன், ராஜேஸ்வரியிடம் ராகுல் உடல்நிலை குறித்து தாசில்தார் விசாரணை நடத்தினார். பின்னர் இதுபற்றி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சம்பத்துக்கு தகவல் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து மர்ம தீயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் உடலை பரிசோதிக்க விழுப்புரத்தில் இருந்து மருத்துவ குழுவை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. 6 பேர் கொண்ட டாக்டர்கள் குழு இன்று பிரம்மதேசம் வந்தது. அவர்கள் குழந்தையை பரிசோதித்தனர்.
குழந்தை உடலில் எப்படி தீப்பிடிக்கிறது, உண்மையிலே தீப்பிடிக்கிறதா? அல்லது வேறு யாராவது தீ வைத்துவிட்டு ஏமாற்றுகிறார்களா? என்று ஆய்வு செய்தனர். பரிசோதனையில் உண்மையை கண்டு பிடிக்க முடியாவிட்டால் ராகுலை சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
ராகுலை பரிசோதிக்க டாக்டர்கள் குழு வந்ததை அடுத்து பிரம்மதேசம் மற்றும் பக்கத்து ஊர்களை சேர்ந்த ஏராளமானபேர் அங்கு திரண்டிருந்தனர்.
Information From Maalaimalar