எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா மோட்டார்ஸ்-இன் நிர்வாக இயக்குனரான எலோன் மஸ்க் தனது எதிர்காலத் திட்டமான ஹைபர்லூப் போக்குவரத்து திட்டத்தைப் பற்றிய அறிவிப்பினை நேற்று வெளியிட்டார். கன்கார்ட், அதிவேக ரயில், ஏர் ஹாக்கி டேபிள் போன்றவற்றை கலந்தாற்போன்ற மாதிரியில், சூரிய சக்தியின் உதவியுடன் உடைந்துவிடாத தன்மை கொண்ட காப்ஸ்யூல் வடிவத்தில் உள்ள இந்த போக்குவரத்து சாதனத்தில் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு அரை மணி நேரத்தில் செல்ல முடியும்.
இது வெற்றியடையும் பட்சத்தில், நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்தில் ஒரு புதிய சாதனையே நடைபெறும் என்று அவர் தெரிவித்தார். ஆயினும், பொருளாதாரம் மற்றும் இதன் பாதுகாப்பு போன்ற விஷயங்கள் இதில் இன்னும் உறுதி செய்யப்பட வேண்டும்.
இதன் ஒரு அமைப்பைச் செய்யவே 6 பில்லியன் டாலர்கள் தேவைப்படும். இதனைக் கட்டி முடிப்பதற்கு 7 முதல் 10 ஆண்டு வரை ஆகக்கூடும். 28 பயணிகள் ஒரே நேரத்தில் செல்லக்கூடிய அளவில் ஒவ்வொரு காப்ஸ்யூலும் இருக்கும். இதன்மூலம் அமெரிக்காவின் பரபரப்பான மேற்கு கடற்கரைப் பகுதியில் ஆண்டுதோறும் ஏழு மில்லியன் மக்களை சுமந்து செல்லக்கூடியதாக இந்தத் திட்டம் அமையும் என்றும், இதன்மூலம் வாகனங்களையும் ஏற்றிச் செல்லமுடியும் என்று மஸ்க்கின் அறிக்கை வெளியீடு தெரிவிக்கின்றது.
கலிபோர்னியா கவர்னர் ஜெர்ரி பிரவுன் திட்டமிட்டிருக்கும் 68 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் அமையவிருக்கும் அதிவேக ரயில் திட்டத்திற்கு இது சிறந்த மாற்றாக இருக்கும் என்று மஸ்க் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஆயினும் இதிலும் தொழில்நுட்பக் கோளாறுகள் உள்ளதாக வல்லுனர்களால் கருதப்படுகின்றது. அவற்றை சரிசெய்ய முற்பட்டால் திட்ட மதிப்பீடு இரண்டு மடங்காகும் என்று புல்லட் ரயில் கண்டுபிடிப்பாளரான ஜிம் போவெல் தெரிவித்துள்ளார்.
Information From Maalaimalar