கொடுங்கையூர் எழில் நகரை சேர்ந்தவர் இனியவன் (வயது 42). இவர் கின்னஸ் சாதனைக்காக 100 கிலோ எடையில் ஒரே இட்லியை தயாரிக்க முடிவு செய்தார். இந்த நிகழ்ச்சி கொடுங்கையூரில் நடந்தது. இதில் மிகப் பெரிய இட்லியை இனியவன் தயாரித்து காட்டினார். இதை எடை போட்ட போது 120 கிலோ 300 கிராம் எடை இருந்தது. இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற முயற்சி மேற் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிகழ்ச்சியின் போது 100 சுவைகளில் 100 வகையான இட்லி கண்காட்சியும் அமைக்கப்பட்டு இருந்தது.
பாதாம், பூசன், கீரை, கேழ்வரகு, சத்து மாவு, எள் என பல வகை பொருட்களால் உருவான இட்லிகள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது. நட்சத்திரம், வீடு, சதுரம், கரடி பொம்மை போன்ற பல்வேறு வடிவங்களிலும் இட்லி தயாரிக்கப்பட்டிருந்தது.
மேலும் அனைத்து கட்சிகளின் சின்னங்கள் வடிவிலும் இட்லி செய்யப்பட்டிருந்தன. தங்க பஸ்பம் இட்லியும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது. இந்த சாதனை தொடர்பாக இனியவன் கூறியதாவது:–
தமிழகத்தில் சாதனையாளர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஆனால் அவர்கள் தங்கள் சாதனைகளை வெளி உலகுக்கு தெரியப்படுத்துவதில் பல தடைகள் மற்றும் இன்னல்கள் உள்ளன. அது போன்ற தடைகளை தாண்டி இந்த கின்னஸ் சாதனை முயற்சியை மேற்கொண்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Information From Maalaimalar