மாநகர பேருந்து வசதி போதிய அளவுக்கு இல்லாத பகுதி மக்கள் வெளியிடங்களுக்கு சென்று வர சிரமம் அடைகின்றனர். இந்த ஏரியா மக்கள் ஷேர் ஆட்டோக்களை நம்பியுள்ளனர். இந்நிலையில் இப்பகுதிகளில் மினி பஸ் இயக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக தனியார் நிறுவனத்திடம் சேஸ் அமைக்க டெண்டர் விடப்பட்டது. தற்போது சேஸ் அமைக்கும் பணி முடிந்து கரூரில் உள்ள பணிமனையில் பாடி கட்டும் பணி நடந்து வருகிறது. இதுவரை 25க்கும் மேற்பட்ட பஸ்களுக்கு பாடிகள் கட்டப்பட்டுள்ளன. பாடி கட்டும் பணி முழுவதுமாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாத இறுதியில் மினி பஸ்கள் இயக்கப்படும் என கூறப்படுகிறது.
முக்கிய பஸ் நிலையம், ரயில் நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களுடன் இணைக்கும் விதத்தில் மினி பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
27 பயணிகள் அமர்ந்து பயணிக்கும் வகையில் மினிபஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் முதியவர்கள், குழந்தைகள் எளிதாக ஏறி, இறங்கும் வகையில் தாழ்தளமாக படிகள் அமைக்கப்படுகிறது.
முதற்கட்டமாக ஆவடி, தாம்பரம், வியாசர்பாடி, பெருங்குடி, செங்குன்றம், திருவொற்றியூர், கேளம்பாக்கம், கோடம்பாக்கம், அமைந்தகரை, நங்கநல்லூர், வேளச்சேரி பகுதிகளில் மினிபஸ்கள் இயக்கப்படும். முதலில் 100 மினிபஸ்களும், பின்னர் தேவைக்கேற்ப பஸ்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Information From Dhinakaran