பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் நகரில் உள்ள கார்ல்டன் நட்சத்திர ஓட்டலில் நகை கண்காட்சி நடந்தது. அதில், ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் தங்க நகைகள் மற்றும் வைரங்களை பார்வைக்காக வைத்திருந்தன.
இந்த நிலையில், கண்காட்சியில் இடம் பெற்றிருந்த ஒரு நிறுவனத்தின் அரங்கில் இருந்து வைரம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
இவற்றின் மதிப்பு ரூ.320 கோடி. இவை இஸ்ரேலை சேர்ந்த லெவ் லெவில் என்ற கேடீஸ்வரருக்கு சொந்தமானவை. இந்த வைர நகைகளை துப்பாக்கி முனையில் ஒரு நபரே கொள்ளையடித்து சென்று இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைத் துப்பாக்கி வைத்திருந்த அந்த நபர் கையுரை அணிந்திருந்தான். முகத்தை கர்ச்சீப்பால் மறைத்திருந்தான். அரங்கத்தில் இருந்தவர்களை துப்பாக்கியால் மிரட்டி நகைகள் அடங்கிய பைகளை அவன் கொள்ளையடித்து சென்றான்.
அப்போது கண்காட்சி நடைபெற்ற அறையின் முன்பு பாதுகாப்பு பணியில் போலீசார் இருந்தனர். இருந்தும், அவன் துணிச்சலாக நூதன முறையில் இந்த கொள்ளை சாகசம் நிகழ்த்தி இருக்கிறான்.
இதுபோன்று நடைபெறும் கண்காட்சியில் நகை கொள்ளை சர்வ சாதாரணமாக நடக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் 18–ந் தேதி பெல்ஜியத்தில் நடந்த கண்காட்சியில் ரூ.300 கோடி மதிப்புள்ள வைரம் கொள்ளையடிக்கப்பட்டது. மே மாதம் நடந்த கேன்ஸ் பட விழாவின் போது 2 நகை கொள்ளை சம்பவங்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது.
Information From Maalaimalar