நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக, முக்கிய அணைகளின் நீர்மட்டம் விரைவாக உயர்ந்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அமராவதி அணை முழு கொள்ளளவை எட்டும் என்பதால், கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், கூடலூர், பாடந்தொரை, ஆலவயல் பகுதிகளில் கனமழை காரணமாக, அங்குள்ள ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை, வருவாய்த் துறையினர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். ஒரு சில இடங்களில் மரங்கள் சாலைகளில் சரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வெள்ள அபாய எச்சரிக்கை
மாவட்டத்தின் முக்கிய அணைகளான அப்பர் பவானி, பைக்காரா, அவலாஞ்சி ஆகியவை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளன. இதேபோல், திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அமராவதி அணை முழு கொள்ளளவை இன்று எட்டும் என்பதால், அமராவதி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அணைக்கு ஐந்தாயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், சுமார் 2 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வால்பாறையில் பகுதியில் பெய்த கனமழையால், அங்குள்ள கூழங்கல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வால்பாறை- பொள்ளாச்சி சாலையில் ராட்சத மரம் ஒன்று விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் அந்த மரத்தை வெட்டி அகற்றினர்.
Information From Puthiyathalaimurai