தமிழ் நூல்களை ஆடியோ புத்தகமாக்கும் அமெரிக்க தமிழர்




கல்கி, உ.வே.சுவாமிநாதையர் ஆகியோரின் நூல்களை, முதியோரும், மாற்றுத்திறனாளிகளும் சிரமமின்றி கேட்கும் வண்ணம், அமெரிக்க வாழ் தமிழர், ஸ்ரீகாந்த், ஆடியோ புத்தகங்களை உருவாக்கி வருகிறார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த, ஸ்ரீகாந்த், 20 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவில் குடியேறினார். அங்கு, மென்பொருள் துறையில், திட்ட மேலாளராக வேலை பார்த்தபடி, தமிழ் மன்றத்தை நிறுவிய ஸ்ரீகாந்த், அதன் மூலம், தமிழ் தொடர்பான, பணிகளில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக, குழந்தைகளுக்கான இசை, கவிதை, பேச்சு, நாடகங்கள் போன்றவற்றை அரங்கேற்றி வருகிறார்.தற்போது, சான்பிரான்சிஸ்கோ பாரதி தமிழ் மன்றத்தின் தலைவராக பணிபுரிந்து வருகிறார். அங்கு உள்ள, ஸ்டான் போர்டு பல்கலை கழக வானொலியில், மூன்று மணி நேரம், தமிழ் சேவைக்காக ஒதுக்கப்படுகிறது. அதில், பாடல், நேர்காணல், நாடகம் என, பலவற்றை ஒலிபரப்பி வருகிறார். அவருடைய பணிகளில் முக்கியமானது, நாவல்களை, ஆடியோ புத்தகமாக தயாரிப்பது.கல்கியின், "பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு' ஆகிய நாவல்களை, ஆடியோ புத்தகமாக வெளியிட்டுள்ளார். மேலும், உ.வே.சா.,வின், "என் சரித்திரம்' நூலை, ஆடியோ புத்தகமாக மாற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்."ஆடியோ புத்தகம் எனில், செய்தி வாசிப்பது போல் இருக்கும்' என்ற, பொதுவான விமர்சனங்களை தாண்டி, தனித்துவத்துடன் உருவாக்கி இருக்கிறார்.நாவலின் நடையில், காட்சி விவரிப்புக்கு ஒரு குரலையும், கதாபாத்திரங்கள் பேசுவதற்கு ஒரு குரலையும் பயன்படுத்தி உள்ளார். கல்கியின், "பொன்னியின் செல்வன்' நூலில் வரும், 40க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களை, தானே பேசி அசத்தியுள்ளார். இது, 75 மணி நேரமாக ஓடும் ஆடியோ புத்தகமாக உள்ளது.

இதுகுறித்து, ஸ்ரீகாந்த் கூறியதாவது: துவக்கத்தில் துபாயில், மென்பொருள் துறையில் வேலை பார்த்த நான், அடுத்த, மூன்று ஆண்டுகளில், அமெரிக்கா சென்றேன். அங்கு, ஆயிரக்கணக்கான தமிழ் குடும்பங்கள் இருந்தன. அவர்கள், பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது; குறிப்பாக, மொழி பிரச்னை அதிகமாக இருந்தது. அடுத்த தலைமுறையினர், ஆங்கிலத்திலேயே எழுதி, பேசுவதால், தமிழ் மொழி மறந்தே போகும் அபாயம் இருந்தது.எனவே, இங்குள்ளவர்கள் தமிழை மறக்காமல் இருக்க, என்னால் இயன்ற வகையில், பணியாற்றி வருகிறேன்.என் வேலை, மிகவும் பரபரப்பானது; மனதளவில் அழுத்தம் கொடுக்க கூடியது. இதில், போதுமான ஓய்வு கிடைப்பது, சாத்தியமில்லாதது. இருந்தாலும், எனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில், அடுத்த தலைமுறையினருக்கு சென்று சேரும் வகையில், தமிழ் சேவை செய்வது, சுகமானது.இவ்வாறு, அவர் கூறினார்.

இவருடைய ஆடியோவை கேட்ட, மாற்றுத் திறனாளிகளும், முதியோரும், இவருடைய சேவையை பாராட்டி, நேரிலும், மின்னஞ்சல் மூலமாகவும், பாராட்டி வருகின்றனர். அவருடைய இணைய முகவரி:www.tamilaudiobooks.com

Information From Dhinamalar


Share this video :
 
Home | About Us | Our Services | Terms of Use | Privacy Policy | Disclaimer | Help | RSS Feeds| Feedback | Contact Us
Support : Copyright © Prabhanjam India Handicrafts Pvt. Ltd. - All Rights Reserved
Proudly powered by Blogger