மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கவிஞர் வாலி கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சினிமா பாடலாசிரியர் கவிஞர் வாலி மூச்சுத் திணறல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த மாதம் 8ம் திகதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில் போதிய முன்னேற்றம் காணப்படவில்லை.
நுரையீரல் தொற்று மற்றும் சளிபடலம் உருவாகி இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் வாலி அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் ஓரளவு குணம் அடைந்ததால் வார்டுக்கு வாலியை கொண்டு வந்தனர். பின்னர் மீண்டும் அவரது உடல் நிலை
மோசம் அடைந்தது.
இதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கடந்த 30 நாட்களாக சிகிச்சை அளித்து வருகின்றனர். நேற்றிரவு அவரது உடல் நிலை மேலும் மோசம் அடைந்ததால், செயற்கை சுவாசம்(வெண்டிலேட்டர்) அளிக்கப்பட்டு வருகிறது.
நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மருத்துவமனைக்கு சென்று வாலியின் உடல் நிலை குறித்து விசாரித்து வருகின்றனர். நடிகர் கமலஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரும் மருத்துவமனைக்கு சென்று உடல் நலம் விசாரித்தனர்.
விஸ்வரூபம் 2 படத்திற்கு ஒரு பாடல் எழுதணும், நாங்க வெயிட் பண்ணிகிட்டு இருக்கோம், அவரை சீக்கிரம் அனுப்பி வைங்க என்று வாலியின் காதில் படும்படி மருத்துவரிடம் கூறிவிட்டு சென்றாராம் கமல்ஹாசன்.