பீஜிங்: சீனாவில் இன்று காலையில ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50 பேர் வரை பலியாகியிருக்கின்றனர். 250 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். சுமார் ஆயிரத்து 500 வீடுகள் இடிந்து தரைமட்டமானதாகவும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமுற்று இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன. உயிர்ப்பலி அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சீனாவின் வடமேற்கு கான்சு மாகாணத்தில் உள்ள திங்சூயில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 47 பேர் இறந்து விட்டதாக சீன தேசிய வானொலி தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவில் 5. 98 இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வகத்துறை தெரிவித்துள்ளது. இதே போல் லாங்கன் மற்றும் லான்ஷோவ் பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. பலரும் தங்களின் வீடுகளில் இருந்து வெளியே ஓடி வந்தனர். பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
முதல் கட்ட தகவலின்படி ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக இடிந்து போயின. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் தேசமுற்றுள்ளன. இன்றைய நிலநடுக்கம் மலை சார்ந்த பகுதியாகும்.
சீன வாசி ஒருவர் இது குறித்து கூறுகையில்: நான் வொர்க்ஷாப்பில் இருந்தேன். எங்களது கட்டடம் ஒரு மாடி மட்டும் உள்ளது. கட்டடம் குலுங்குவதை உணர்ந்த நான் வெளியே ஓடி வந்தேன். அருகில் இருந்த 18 மாடி கட்டடம் ஒன்று சரிந்து விழுந்ததை பார்த்தேன் . என்றார். கடந்த 2008 ல் சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 90 ஆயிரம் பேர் இறந்தனர். லட்சக்கணக்கானோர் வீடுகள் இழந்தனர்.
Information From Dhinamalar
