இந்தியாவின் மிக நீளமான பாலம் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை 2016-ம் ஆண்டிற்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
4.94 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட உள்ள இந்த பாலம் ரயில்கள், மற்றும் சாலைவசதிக்கும் ஏற்ற தன்மை கொண்டதாக இருக்கும்.இந்த திட்டப்பணிகள் வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே மூலம் நடைமுறைப்படுத்தப்படும்.
இந்த பாலம் அஸ்ஸாம்(Upper assam) மற்றும் அருணாசலப் பிரதேசத்தை இணைக்க உதவிகரமாக இருக்கும். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, தற்போது இந்த பிரம்மபுத்திரா நதியை கடப்பதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகும். ஆனால் இந்த பாலம் கட்டிமுடிக்கப்பட்டால் ஒருசில நிமிடங்களில் இந்த நதியை கடந்து விடலாம் என கூறப்படுகிறது.
மேலும் இந்திய தேசத்தின் பாதுகாப்பிற்கும் இந்த பாலம் உறுதுணையாகவும் இருக்கும் எனத் தெரிகிறது. இந்திய வீரர்கள் தங்களது இராணுவ தளவாடங்கள் மற்றும் கடினமான பொருட்களை இந்த பாலத்தின் மூலம் எளிதாக எல்லைப்பகுதிக்கு கொண்டு செல்லமுடியும் என நம்பப்படுகிறது.
தற்போது இந்திய எல்லைப்பகுதிக்குள் சீனாவின் ஊடுருவல் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்திய பகுதிக்குள் சீன வீரர்கள் வருவதும் போவதுமாக உள்ளனர். இந்த பாலம் கட்டிமுடிக்கப்பட்டால் இந்திய வீரர்கள் தங்களது படைகள் மற்றும் ஆயுதங்களுடன் விரைவில் இந்திய-சீன எல்லையை அடைய முடியும். இதன்மூலம் சீனவீரர்கள் ஊடுருவினால் விரைந்துசென்று அவர்களை விரட்டியடிக்க இந்த பாலமும் உதவும் என கருதப்படுகிறது.
இருந்தபோதிலும் தற்போது இந்த நதியினை ஒட்டியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த பாலம் முழுமையாக கட்டப்பட்டால் தங்களது வாழ்வாதராம் முழுவதும் பாதிக்கப்படும் எனவும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
Information From Puthiyathalaimurai